Friday, February 21, 2020

குட்டிக்கதைகள் -

1.மரணத்தை வென்ற மார்கண்டேயன்

முன்பு ஒரு காலத்தில் மிருகண்டர் என்ற மகரிஷி வாழ்ந்து வந்தார். அவரும் அவருடைய மனைவியான மருதவதியும் சிவபெருமானின் தீவிர பக்தர்கள் ஆவார்கள். ஆனால் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அவர்களுக்கு குழந்தை இல்லை. ஆகவே சிவபெருமானை புகழ்ந்து பாடல்கள் பாடியும், அவரைப் பற்றிய கதைகளைப் பரப்பியும் வாழ்ந்து வந்தார்கள்.

கடைசியாக அவர்களின் செயலால் மனம் குளிர்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு காட்சி அளித்து, குழந்தை வரத்தை அளித்தார். அந்த குழந்தை தான் மார்கண்டேயன். இங்கு மரணத்தை வென்ற மார்கண்டேயன் கதை கொடுக்கப்பட்டுள்ளது

சிவபெருமான் கொடுத்த வரம் மிருகண்டர் என்பவர் மகரிஷி ஆவார். அவருடைய மனைவி மருதவதி. அவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைச்செல்வம் இல்லை. அதற்காக சிவபெருமானை வேண்டினார் மகரிஷி. அவர் முன் தோன்றிய சிவபெருமான், 'மிருகண்டா, உன்னால் நான் மனம் குளிர்ந்தேன். சொல், நீண்ட காலம் வாழப்போகும், ஆனால் முட்டாள்களாக இருக்க போகும், 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது பதினாறு வருடங்களே ஆழப்போகும் புத்திசாலியான ஒரு குழந்தை வேண்டுமா?' என கேட்டார்.
அதற்கு மகரிஷி 'கடவுளே, அந்த புத்திசாலி மகனை மட்டும் கொடுங்கள்', என உடனடியாக கூறினார். 'நல்லது! உனக்கு அவன் கிடைப்பான்!' என சிவபெருமான் கூறினார். விரைவிலேயே மகரிஷிக்கு மகன் பிறந்தான். அவனுக்கு மார்கண்டேயன் என பெயரும் வைத்தார். அந்த சிறுவனும் புத்திசாலியாகவும் அழகானவனாகவும் வளர்ந்தான். வேத சாஸ்திரங்களை அவன் சுலபமாக கற்றுக் கொண்டான். அனைவருக்கும் அவனை பிடித்திருந்தது.

அந்த சிறுவன் 16 வயதை நெருங்கி கொண்டிருந்த போது, மிருகண்ட மகரிஷியின் கவலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு நாள் மார்கண்டேயன் தன் தந்தையை பார்த்து 'தந்தையே, ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?' என கேட்டான். அதற்கு 'மகனே, நான் உன்னிடம் என்ன சொல்வது? உன்னை எங்களுக்கு சிவபெருமான் அளிக்கையில் நீ 16 வருடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பாய் என கூறினார். நீ இப்போது அந்த வயதை அடைய போகிறாய். இந்த வருடம் முடியும் போது நீ எங்களை விட்டுச்சென்றால் உன் இழப்பை நாங்கள் எப்படி தாங்குவோம்' என மகரிஷி கூறினார்.

தந்தையே! இது தான் காரணமா? சிவபெருமானுக்கு அவரின் பக்தர்களின் மீது அன்பு உண்டு. அதை நீங்களே என்னிடம் கூறியுள்ளீர்கள். அவர் பலரையும் சாவில் இருந்து இதற்கு முன் காப்பாற்றி இருக்கிறார். அதை நான் புராணங்களில் படித்து இருக்கிறேன். அதனால் இன்றிலிருந்து இரவும் பகலுமாக நான் சிவபெருமானை வணங்க ஆரம்பிக்கிறேன். கண்டிப்பாக அவர் என்னையும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.' என மார்கண்டேயன் கூறினான்தன் மகனின் வார்த்தைகளை கேட்ட மிருகண்ட மகரிஷி சந்தோஷம் அடைந்தார். தன் மகனுக்கு ஆசி வழங்கினார். கடற்கடையில் சிவலிங்கம் ஒன்றினை மார்கண்டேயன் கட்டினான். காலை, மாலை, இரவு என எந்நேரம் ஆனாலும் சிவபெருமானை வழிபட தொடங்கினான். பஜனைகளை பாடி, நடனம் ஆடியும் கூட அவன் வழிபாட்டை தொடர்ந்தான்.

கடைசி தினத்தன்று, மார்கண்டேயன் பஜனைகள் பாட தொடங்கும் போது, மரணத்தின் கடவுளான எமன் அவனிடம் வந்தார். ஒரு எருமையின் மீது ஏறி எமன் வந்தார். தன் கையில் பாசக்கயிற்றை வைத்திருந்தார். மார்கண்டேயனிடம் 'உன் பஜனையை நிறுத்து சிறுவனே! இந்த பூலோகத்தில் உன் வாழ்க்கை முடிவடைந்து விட்டது. மரணத்திற்கு தயாராக இரு' என எமன் கூறினார். இதை கேட்ட மார்கண்டேயன் பயப்படவில்லை. தன் தாயை குட்டி எப்படி பற்றிக்கொள்ளுமோ அதே போல் அவன் சிவலிங்கத்தை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டான்.

சிறுவனின் கழுத்தில் எமன் பாசக்கயிற்றை வீசினார். அவனை சிவலிங்கத்தை விட்டு இழுக்க முயன்றார். அப்போது அந்த சிவலிங்கம் வெடித்து, அதனுள் இருந்து சிவபெருமான் வெளியேறினார். எமனை நெஞ்சில் எட்டி உடைத்த சிவபெருமான், 'எமா, போய் விடு. இந்த சிறுவனை தொடாதே! அவன் என் மனம் கவர்ந்த பக்தன். இவன் சிரஞ்சீவியாக வாழ்வான்' என கூறினார். மரணத்தை வென்ற மார்கண்டேயன் எமன் நிலை குலைந்து போனார். எப்போதும் போல் இல்லாமல் இன்னும் பக்தியுடன் 

சிவபெருமானை வணங்கினான் மார்கண்டேயன். இந்த ஜெபத்தின் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் 'இந்த மரணம் என்னை என்ன செய்யும்' என முடிந்தது. இப்போதும் கூட பலரும் இதனை ஜெபிப்பார்கள். வீட்டிற்கு வந்த மார்கண்டேயன் தன் பெற்றோரின் கால்களில் விழுந்தான். அவனை கட்டித்தழுவிய அவர்கள் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டனர். மிகப்பெரிய ரிஷியாக மாறிய மார்கண்டேயன் நீண்ட நாட்கள் வாழ்ந்தான். 
2.சுதர்சனச் சக்கரம்
சுதர்சனச் சக்கரம் என்றால் சட்டென நம் நினைவுக்கு வருபவர் ஸ்ரீமந் நாராயணன்தான். தன் நான்கு கரங்களிலும் முறையே சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஆகியவற்றைத் தாங்கியிருப்பவர் திருமால். தனது சுதர்சனச் சக்கரத்தால் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியவர். அவரின் திருக்கரத்தில் உள்ள சுதர்சனம், பக்தர்களை தீமைகளில் இருந்து காக்கவல்லது. அந்த சுதர்சனம் எப்போது எங்கே தோன்றியது?

ஒருமுறை சிவபெருமானை தரிசிக்க, இந்திரன் திருக்கயிலாயத்துக்குச் சென்று கொண்டிருந்தான். பார்க்கின்ற பொருளெல்லாம் பரம்பொருள் என்பதை இந்திரன் உணர்ந்திருக்கிறானா என்பதைச் சோதிக்கத் திருவுளம் கொண்டார் ஈஸ்வரன். மகா ருத்ர சொரூபத்துடன் இந்திரனுக்கு முன்னே காட்சி தந்தார். அதை உணராத இந்திரன், தன்னை மறித்து நிற்பது அரக்கன் என்றெண்ணி, ருத்ரன் மீது தன் கையில் உள்ள வஜ்ராயுதத்தை எறிந்தான். அந்த ஆயுதம் ருத்ரன் மீது பட்டதும், அவர் உடல் சிலிர்த்து, கோபாக்னி உண்டாகி, வியர்வைத் துளிகளாக மாறி, கடலில் சிதறி விழுந்தன. பிறகுதான், வந்திருப்பது சிவனார் என அறிந்த இந்திரன், மனம் வருந்தி அவரின் திருவடியில் விழுந்தான். கடலில் விழுந்த ருத்ரனின் வியர்வைத் துளிகள் ஒன்று சேர்ந்து அரக்கனாக வடிவெடுத்தது. பிரம்மதேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு, சமுத்திரராஜனால் வளர்க்கப்பட்ட அந்த அசுரன், ஜலந்தரன் என அழைக்கப்பட்டான். ஆக, இந்திரனின் அறியாமையாலும் அவசரத்தாலும் தோன்றினான் ஜலந்தரன். ருத்ரனின் வியர்வைத் துளியில் இருந்து தோன்றியவன், பிரம்மாவின் வரம் பெற்றவன் என்பதால், தன்னை எவராலும் அழிக்கமுடியாது என இறுமாப்புடன் இருந்தான் ஜலந்தரன். மூவுலகையும் வென்று, தேவர்களை அடிமைப்படுத்தினான். நாளாக ஆக, அவனது ஆணவமும் அதிகரித்தது.

பிரம்மாவையும் திருமாலையும்கூட வெற்றி கொண்டான்; கொடுமைகள் பல புரிந்தான். முடிவில், தன்னைப் படைத்த ஈஸ்வரனைவிட தான் உயர்ந்தவன் என கர்வம் கொண்டு, சிவனாரை அடிபணியச் செய்யும் முயற்சியாக, திருக்கயிலாயம் புறப்பட்டான். வழியில், வேதியர் வடிவில் அவனுக்கு முன்னே தோன்றினார், சிவனார். சிவனாருக்கு அடுத்த ஸ்தானத்தில் நான் இருக்கிறேன். சிவபெருமானை வெல்ல வேண்டுமென்றால், முதலில் என்னால் நிர்மாணிக்கப்படும் சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றை அழிக்கும் சக்தி உனக்கு இருக்கிறதா என்று பார்ப்போம் எனச் சவால் விட்டார் சிவனார். அதனை ஏற்றான் ஜலந்தரன். வேதியராக வந்த சிவனார், தன் பாத விரல்களால் பூமியைக் கிளறி, மகா சுதர்சன சக்கரத்தை வரிவடிவமாக உருவாக்கினார். முடிந்தால், இந்த மகா சுதர்சனச் சக்கரத்தை எடுத்து, உன் சிரசில் வைத்துக்கொள், பார்ப்போம்! என்றார் ஜலந்தரனிடம். உடனே அவன், அந்தச் சுதர்சனச் சக்கரத்தை அப்படியே பெயர்த்தெடுத்தான்; தன் சிரசின் மீது வைத்துக்கொண்டான். ஆணவமும் காமமும் மிகுந்த அவனது உடல், இருகூறாகப் பிளந்தது. ஜலந்தரனின் உடல் அழிந்தது. ஆனாலும், அழியா வரம் பெற்ற அவனது ருத்ர சக்தி, சுதர்சனச் சக்கரத்தில் ஒன்றாகக் கலந்தது. அதன் பிறகு, மகா சுதர்சனம், மகேஸ்வரனின் திருக்கரத்தில் அமர்ந்தது. இதுதான் சுதர்சனம் தோன்றிய கதை! இந்த சுதர்சனம் எப்படி திருமாலின் கைக்கு வந்தது?

கோலோகம். திருமாலின் சேவையே பெரிதெனக் கருதி வாழ்ந்தவள் துளசிதேவி. அவள் ஒரு சாபத்தால், பூவுலகில் பிருந்ததை என்பவளாக, மிக்க அழகுடன், காலநேமி என்கிற அரக்கனுக்கு மகளாகப் பிறந்தாள். அவளே ஜலந்தரனின் மனைவியானாள். அவளது பதிவிரதா சக்தியால்தான், அழியா வரம் பெற்றிருந்தான் ஜலந்தரன். முடிவில், சிவபெருமானால் அவன் அழிந்ததும், பிருந்ததை தீக்குளித்தாள். எப்போதும் திருமாலுடன் வாசம் செய்யும் வரம் பெற்று, மீண்டும் துளசியோகி, சேவையாற்றி வந்தாள். ஜலந்தரனுடன் வாழ்ந்தவள் துளசி. எனவே, அவன் உறைந்திருக்கும் மகா சுதர்சனச் சக்கரத்தையும் தன் திருக்கரத்தில் வைத்து, பிருந்தா-ஜலந்தர சங்கமத்தைத் தன்னுள் நிகழ்த்த விரும்பினார் திருமால். மேலும் பூவுலகில், தர்ம ஸ்தாபனம் எனும் கடமையைச் செய்ய, சுதர்சனத்தின் பங்கு இருப்பதை அறிந்து, அதனைச் சிவனாரிடம் இருந்து பெற, ஈஸ்வரனை பூஜிக்கத் துவங்கினார் ஸ்ரீமந் நாராயணன். ஆயிரத்தெட்டு தாமரை மலர்களைப் பறித்து, அதைக் கொண்டு ஆதிசிவனாரை அர்ச்சித்து வழிபடலானார். அப்போது, சிவனாரின் சங்கல்பத்தால், ஒரேயொரு மலர் மறைந்துவிட... மந்திரம் ஒன்றுக்கு மலர் ஒன்று குறைந்தது கண்டு, தன் கமலக்கண்ணையே பெயர்த்து, மலராகச் சமர்ப்பித்தார், திருமால். கண்ணப்பருக்கு முன்னோடியாக, கண் ஒன்றை மலராகத் தந்ததாலேயே, கண்ணன் எனும் திருநாமம் பெற்றார் ஸ்ரீமந் நாராயணன். அந்த பூஜையில் மகிழ்ந்த சிவனார், மகா சுதர்சனச் சக்கரத்தை திருமாலிடம் தந்து, துஷ்டர்களைச் சம்ஹரித்து, பக்தர்களை ரட்சிக்கிற பணியை அவரிடம் தந்தருளினார். ஆக, சங்கரனால்.. சக்கரதாரியானார் திருமால்.

3.முதலில் தோன்றியது யார்?

சிவபுராணம்..! 
  எல்லைகளுக்கு உட்படாத அபரிவிதமான சக்திகளை தன்னகத்தே கொண்டு எல்லாம் கொண்டவராகவும், ஆனால் எதிலும் பற்று இல்லாமல் அமைதியாக இருந்து யோக நிலையில் அமர்ந்து பல திருவிளையாடல்களை புரிந்த சிவபெருமானை பற்றியும் அவரால் இயற்றப்பட்ட பல திருவிளையாடல்களை நாம் இங்கு காண்போம்.

சிவபுராணம் என்பது சிவபெருமானின் தோற்றம், அவரின் சக்திகள் மற்றும் அவரால் இயற்றப்பட்ட திருவிளையாடல்களின் தொகுப்பாகும்.

புராணம் என்றால் என்ன? 

புராணம் என்பது நம் முன்னோர்களால் எக்காலத்தில் வாழும் மானிட பிறவிகளுக்காக அளிக்கப்பட்ட ஒரு வரப் பிரசாதம் ஆகும். புராணம் என்றால் தொன்மை என்று பொருள். பல பெருமைகளை கொண்ட தொன்மையான நம் நாட்டில் வாழ்ந்த முன்னோர்களால் எதிர்காலத்தில் நிலவும் சங்கடங்களை களையவும், அறவழியில் சென்று தீர்வு காணும் விதமாக இயற்றப்பட்ட கதைகளின் சங்கமம் ஆகும். 

விந்தைகளுடன் கூடிய பல நன்மை பயக்கும் கதைகளையும், ஞான மார்க்கத்தின் அவசியத்தையும் பல யுகங்களாக காலம் தவறாமல் அனைவரிடத்திலும் இனிமையாகவும் எளிதில் புரியும் வண்ணம் இறைவனை கொண்டு படைக்கப்பட்ட அரும் பெரும் ஞான பொக்கிஷம் தான் இந்த புராணம். 

பிரளயம் : 

பிரளயம் ஒன்று உண்டாகி உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இறந்து போய் விட்டன. உலகின் எப்பகுதியை கண்டாலும் நீரால் சுழப்பட்டு இருந்தன. சகல லோகங்களும் நீரினால் மூழ்கி சமுத்திரமாக காட்சியளித்தன. அந்த பிரளயத்தின் காரணமாக சிருஷ்டிக் கர்த்தாவான பிரம்ம தேவர் மயக்கமுற்று ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.

நீர்ப்பரப்பின் மீது ஆதிசேஷன் மேல் ஸ்ரீமந் நாராயணன் சயனித்திருந்தார்.

திடீரெனக் கண் விழித்து பார்த்த பிரம்மாவுக்கு பிரளயத்தின் விளைவாக அனைத்து லோகங்களும் நீரினால் அழிந்து போயின என்பதை கண்டார். பிரளயத்தின் விளைவாக யாவற்றையும் மறந்த பிரம்ம தேவருக்கு தாம் தான் சிருஷ்டி கர்த்தா என்ற ஒன்று மட்டும் நினைவில் இருந்தது.

மீண்டும் தன் பணியான சிருஷ்டித்தல் தொழிலை செய்ய தொடங்கினார். தாம் எண்ணிய பணிக்கு உதவும் வகையில் யாரேனும் உள்ளாரா எனப் பார்த்தார். அப்போது ஆனந்த நித்திரையில் இருந்த நாராயணனை கண்டார். 

தான் எண்ணிய பணியை நிறைவேற்ற தனக்கு உதவியாக இருக்கும் வகையில் இன்னொருவரை கண்ட பிரம்மா அவர் அருகில் சென்றார்.

நித்திரையில் இருந்த நாராயணனை எழுப்பி சர்வ உலகங்களும் அழிந்துள்ள இந்த தருவாயில் நித்திரையில் ஆழ்ந்து இருக்கும் நீர் யார்? என வினவினார்.

நித்திரையில் ஆழ்ந்த ஸ்ரீமந் நாராயணன் யாவும் மறந்தவராக காட்சியளித்தார். பின்பு சிறிது காலத்திற்கு பின் யாம் யாரென்றும், தம்முடன் உரையாடுபவர் யாரென்றும் அறிந்த ஸ்ரீமந் நாராயணன் என்ன குழந்தாய் வேண்டும்? என வினவினார்.

இதைக் கேட்ட பிரம்மதேவர், யாரை குழந்தை என்று அழைக்கிறாய் என சினமுடன் கேட்டார். நான் யார் என்று நீர் அறிவீரோ? நானே இந்த சிருஷ்டியை படைத்தவன்! நானே உன்னையும் படைத்தவன் என்று கர்வத்தோடு பிரம்மதேவர், ஸ்ரீமந் நாராயணனிடம் சினத்துடன் உரையாடினார்.

ஸ்ரீமந் நாராயணன் இவரின் பதில் உரையை கேட்டு சினம் கொள்ளாமல் கனிவான குரலில் நீரே எம்மிடமிருந்து தோன்றியவன் என்று பதில் உரையை அளித்தார். இதைக்கேட்ட பிரம்மதேவர் நானே உன்னை படைத்தவன் என்று கர்வத்தோடு உரையாடினார்.

ஸ்ரீமந் நாராயணன் சிரித்த இன்முகத்தோடு நீரே என் நாபிக் கமலத்தில் இருந்து தோன்றிய தாமரை மலரில் உதயமானவர் என்றும், இதுவே உன் பிறப்பின் ரகசியம் என்றும் கூறினார்.

இதை சற்றும் ஏற்றுக்கொள்ளாத பிரம்மதேவர் எதிர்வாதம் புரிந்தார். இருவருக்கும் இடையில் இருந்த உரையாடல் கடும் வாக்குவாதமாக மாறியது.

அவ்வேளையில் அக்னி சொரூப ஜோதி உருவத்தில் அண்டத்தின் பரம்பொருளான சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றினார். இதைக்கண்ட இருவரும் தம்மை விட சக்தி இன்னொருவர் இருக்கக்கூடும் என அறிந்தனர்.

அவ்விருவரும் தங்கள் வாதத்திற்கான மூலக் காரணத்தை கூறி நீரே இதற்கு தீர்வு வழங்க வேண்டும் என்று வேண்டினர். அப்போது லிங்க ரூபத்தில் இருந்து ஒரு அசரீரி உருவாகியது.

அதாவது இருவரில் யார் எனது அடியை அல்லது முடியை முதலில் காண்கிறீர்களோ அவரே முதலில் தோன்றியவர் என்று அந்த அசரீரி உரைத்தது.

இதுவே சரியென முடிவெடுத்த இருவரும் அன்னப்பறவை அவதாரம் எடுத்து லிங்கத்தின் முடியை காண பிரம்மதேவர் தனது பயணத்தை தொடங்கினார். ஸ்ரீமந் நாராயணன் வெண்பன்றியின் அவதாரம் எடுத்து லிங்கத்தின் அடியை காண தனது பயணத்தை தொடங்கினார்.

  ஸ்ரீமந் நாராயணன் மற்றும் பிரம்ம தேவர் இருவரும் பல யுகங்களாக தனது பயணத்தை மேற்கொண்ட போதும் இருவராலும் அடியையோ, முடியையோ காண இயலவில்லை. ஸ்ரீமந் நாராயணன் இந்த லிங்க வடிவம் முடிவற்றது என்பதை உணர்ந்து தனது பழைய இடத்தை நோக்கி பயணத்தை தொடங்கினார். 

ஆனால், பிரம்ம தேவர் லிங்க வடிவத்தின் உச்சியை காணும் முயற்சியை கைவிடாமல் பயணத்தை தொடர்ந்தார். ஒரு சிறு கால இடைவெளியில் லிங்க வடிவத்தின் உச்சியில் இருந்து தாழம் பூவருவதை பிரம்ம தேவர் கண்டார்.

பிரம்ம தேவர் தாழம் பூவின் அருகில் சென்று லிங்கத்தின் உச்சியை அடைய இன்னும் எவ்வளவு காலம் பிரயாணம் மேற்கொள்ள வேண்டும் என வினவினார். அதற்கு தாழம் பூ இன்னும் பல கோடி யுகங்கள் கடந்து செல்ல வேண்டும் என்று கூறியது.

இதை கேட்ட பிரம்ம தேவர் மலைப்புற்று இனியும் பல கோடி ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டுமா என யோசித்தார். சிறிது நேர சிந்தனைக்கு பின் தாழம் பூவிடம் ஒரு உபயம் வேண்டும் என பிரம்ம தேவர் வேண்டினார். பிரம்ம தேவரின் வேண்டுகோளை ஏற்று, வேண்டிய உதவியை அளிப்பதாக தாழம்பூவாக்குறுதி கொடுத்தது. 

பிரம்ம தேவரும், தாழம் பூவும் பயணம் ஆரம்பித்த இடத்திற்கு செல்ல பயணம் மேற்கொண்டனர். ஆனால் இவர்கள் இருவரும், சர்வமும் உணர்ந்த பரம்பொருள் இவை அனைத்தையும் கண்டுக்கொண்டு உள்ளார் என்பதை மறந்தனர்.

இறுதியாக ஸ்ரீமந் நாராயணன் இருக்கும் இடத்தை அடைந்த பிரம்ம தேவர் நாராயணனிடம் தான் லிங்கத்தின் முடியை கண்டதாகவும் அதற்கு, இந்த தாழம் பூவே சாட்சி என கூறினார். தாழம் பூவும் பிரம்மாவிடம் கொடுத்த வாக்குறுதிக்கு இணங்கி ஆமாம் பிரம்ம தேவர் லிங்கத்தின் முடியை கண்டதாக பொய் சாட்சி கூறியது.

தாழம் பூ உரைப்பது பொய் என அசரீரி சினத்துடன் உரைத்தது.

லிங்கத்தில் இருந்து வந்த அசரீரியை கேட்ட பிரம்ம தேவர் அதிர்ந்து போனார். அப்போது ஸ்ரீமந் நாராயணன் என்ன நிகழ்ந்தது என அறியாமல் நின்றார். பின்பு பிரபஞ்சத்தின் ஜோதி லிங்கமானது சிவபெருமானாக காட்சியளித்தார்.

ஆனால், சிவபெருமானை காண இயலாத வகையில் ஒளியானது பிரகாசித்தது. மீண்டும் இருவரும் சிவபெருமானை வணங்க ஒளியின் பிரகாசம் குறைந்து அவர்களுக்கு பரிபூரணமாக சிவபெருமான் காட்சியளித்தார்.

காட்சியளித்த சிவபெருமான் பிரம்மாவை நோக்கி நீர் செய்தது தவறு என உரைத்தார். செய்த தவறுக்காக நீர் படைக்கும் சிருஷ்டியில் உனக்கு கோவில் இல்லாமல் போகவும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ பூஜைக்கு பயன்படாமல் போகட்டும் என சபித்து விட்டார்.

தான் செய்த தவறை உணர்ந்த பிரம்ம தேவர் சிவனிடம் மன்னிக்கும்படி வேண்டி அருளினார். சினம் கொண்ட சிவபெருமான் செய்த தவறை உணர்ந்த பிரம்ம தேவரை மன்னித்தருளினார். பின் இருவரும் சிவனை வணங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் திருமாலை காக்கும் தெய்வமாகவும், பிரம்மாவை படைக்கும் தெய்வமாகவும் இருக்க அருள் புரிந்தார்.

மேலும் திருமால் சிவபெருமானிடம் பிரபஞ்ச உபதேசம் செய்தருள வேண்டும் என வணங்கி நின்றார். சிவபெருமானும் அவரின் வேண்டுதலை ஏற்று உபதேசம் செய்தார். சிவபெருமான் அருளிய உபதேசங்களில் இருந்து திருமால் மந்திரத்தையும், அதை கடைபிடிக்கும் முறைகள் யாவையும் உணர்ந்தார்.

பின் திருமால் தான் கற்ற உபதேசத்தை பிரம்ம தேவருக்கு சிவன் அருளிய முறையில் உபதேசம் செய்தார். திருமால் உபதேசிக்கும் பொழுது சிவபெருமான் அங்கு காட்சியளித்தார். பிரம்ம தேவர் சிவபெருமானிடம் சிருஷ்டியில் வாழும் உயிர்கள் அறவழியில் நடந்து மோட்சம் அடையும் வழியையும் போதிக்கும்மாறு வேண்டியருளினார். சிவபெருமானும் அவரின் வேண்டுகோளை ஏற்று அருள் பாவித்தார்.

அடியும், முடியும் இன்றி முடிவற்றதாக உள்ள லிங்க வடிவத்தை வழிபட்டால் வாழும் வாழ்க்கையில் எது உண்மையான அன்பு மற்றும் எதில் எல்லா வகையான நிம்மதிகள் உள்ளன என்பதை அறிந்து பிறவிகளின் உன்னத நிலையான பிறவா நிலையை அடைவார்கள் என்று ஞான வழியை போதித்தார்.

No comments:

Post a Comment

Vaitheeswaran-God of healing. (let's pray to him to fight against Corona.

Vaitheeswaran meaning the "God of healing" and it is believed that prayers to Vaitheeswaran can cure diseases. Vaithee...